Valli Organics

Valli Organics Valli Organics is a supplier of organic goods online from Tamilnadu, India. We manufacture goods nat

"நாம் பயன்படுத்தும் நெகிழி பைகள் மக்கி போக பலநூறு ஆண்டுகள் ஆகும்" என்று ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது ஒரு ஆசிரி...
28/11/2022

"நாம் பயன்படுத்தும் நெகிழி பைகள் மக்கி போக பலநூறு ஆண்டுகள் ஆகும்" என்று ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது ஒரு ஆசிரியர் சொன்னதாக நினைவில் உள்ளது. சிலர் ஐநூறு ஆண்டுகள் என்றும், வேறு சிலர் ஐந்தாயிரம் ஆண்டுகள் என்றும் கூறுகின்றனர். கிட்டத்தட்ட எந்த வகையான பிளாஸ்டிக்கும் மக்கி போவதில்லை.

ஒரு பிளாட்டிக் பூந்தொட்டியில் செடி வைத்திருந்தால், வெயிலில் காய்ந்தும் மழையில் மழையில் நனைந்தும் இருக்க வேண்டிய அந்த தொட்டி, இரண்டு வருடத்தில், அப்பளம் போல சொடக் சொடக் என்று நொறுங்க தொடங்கி விடுகிறது. சூரிய ஒளியின் புற ஊதா கதிர்களால் அது அதிகமாகவே பாதிக்கப்படுகிறது.

அதே போல தரையில் நடப்படும் ஒரு கம்பத்தை கரையான் அரிக்கக்கூடாது என்பதற்காக அடிப்புறத்தில் பிளாஸ்டிக் பைகளை சுத்தி நடுவார்கள். ஆனால் அதுவும் அதிக நாட்கள் ஆகும்போது சற்றே சிதைய ஆரம்பித்து விடுகிறது. இயற்கையான கழிவுகளை போல மக்கி போவதில்லை என்பது உண்மைதான், ஆனால் மக்கவே மக்காது என்பது உண்மையில்லை.

சரி, பிளாஷ்டிக்கும் மக்கும் என்றால், தைரியமாக நாம் பயன்படுத்தலாம்தானே? நமது சூழல் அதனால் கெடாது தானே?.

பிளாஷ்டிக்கும் மக்கும். இயற்கையில் சிதையும். ஆனால் இயற்கையான கழிவுகளை விட அதிக நாட்கள் எடுக்கும். அதனால் யாருக்கு நஷ்டம்?

பிளாஸ்டிக் பயன்பாட்டினால் சுற்றுசூழல் பாதிக்கப்படும், பூமியை மெதுமெதுவாக நாம் அழித்துக்கொண்டிருக்கிறோம். நாம் பூமியை காப்பாற்ற வேண்டும் என்று பலர் இப்போது சொல்கிறார்கள். இதிலே பாதி உண்மை, பாதி பொய்.

சுற்றுசூழல் பாதிக்கப்படும் என்பது உண்மை. ஆனால் நாம் பூமியை அழிக்கவில்லை. அழிக்கவும் முடியாது. எந்த விஷயத்தை மனிதன் படைக்கவில்லையோ, அந்த விஷயத்தை மனிதனால் அழித்துவிடவும் முடியாது. இந்த பூமியும் மனிதனால் அழிக்கப்பட முடியாத ஒன்று.

பிளாஸ்டிக் பொருட்களை மக்கவைக்கும், பிளாஸ்டிக் பொருட்களை சாப்பிடும் கிருமி கூட இருக்கிறதாம். விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். விஞ்ஞானிகள் அதை தயாரிக்கவில்லை. இயற்கையிலேயே அந்த கிருமி இருக்கிறது. அதை 2016ல் ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

பூமி உருவான காலத்தில் இருந்து இன்று வரை உள்ள காலத்தை 24 மணி நேரமாக கணக்கிட்டால், அதில் மனிதன் உருவான காலம் 23 மணிநேரம், 59 நிமிடம், 56 வினாடிகள் ஆகும். அதாவது அந்த 24 மணிநேரத்தில் கடைசி 4 வினாடிகள் மட்டுமே மனித சமுதாயத்தின் மொத்த வரலாறு.

அந்த நான்கு வினாடி காலத்திற்குள்தான் குரங்கு மனிதன், ஆதி மனிதன், நாடோடி மனிதன், விவசாயத்தை கண்டுபிடித்தவன், லெமூரியாவில் வாழ்ந்தவன், அரசாட்சியை உருவாக்கியவன், அறிவியல் விஞ்ஞானி, நவீன மனிதன் என அனைவருமே இருக்கிறான். அப்படியானால் அந்த 24 மணி நேரத்தில் எத்தனை உயிர்கள் இந்த உலகில் வந்து போயிருக்கும்? எத்தனை மாற்றங்களை பூமி கண்டிருக்கும்?.

தன்னை எதிர்த்து வரும் ஒரு அச்சுறுத்தலை சமாளிக்க, அதை எதிர்கொள்ள பூமிக்கு நன்றாக தெரியும். மேலும் பிளாஸ்டிக் பூமிக்கு அச்சுறுத்தல் அல்ல. நமக்கான அச்சுறுத்தல்.

பொன்னாங்கண்ணி கீரை இந்தியாவில் எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூடிய சாதாரணமான கீரை. அதிலே இருக்கும் ஆரோக்கியம் சார்ந்த விஷயங...
06/11/2022

பொன்னாங்கண்ணி கீரை இந்தியாவில் எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூடிய சாதாரணமான கீரை. அதிலே இருக்கும் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்கள் மிக அதிகம். இது கற்பக மூலிகையென்று அந்தக்கால சித்தர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனெனில் சகல விதமான நோய்களுக்கு இதை மருந்தாக பயன்படுத்தி இருக்கின்றனர்.

பொதுவாக காய்கறிகள், கீரைகளில் அரிசி உணவை போல் அதிக கார்போஹைட்ரேட் இருக்காது. வைட்டமின்கள், தாதுஉப்புக்கள், உயிர்ச்சத்துக்கள் மட்டுமே அதிகம் இருக்கும். ஆனால் இந்த பொன்னாங்கண்ணி கீரையில் மட்டும் வைட்டமின்கள், தாது உப்புக்களோடு உடலுக்கு சக்தி அளிக்கும் மாவு சத்தும் இருக்கிறது. சோறு பாதி, இந்தக் கீரை பாதி என்று சாப்பிட்டு விட்டு, வயலில் இறங்கி வரப்பு கட்டலாம்.

இதிலே சுண்ணாம்பு சத்து (அதாங்க கால்சியம், கால்சியம்), இரும்பு சத்து, தங்கச்சத்து போன்ற சத்துக்களும் இருக்கிறதாம். அதனால் இந்தக் கீரையை தொடர்ந்து வேகவைத்து உண்டால், சும்மா தங்க பஸ்பம் சாப்பிட்ட மாதிரி உடல் தகதக வென்று ஜொலிக்குமாம். அப்படியே கொஞ்சம் பூண்டு சேர்த்து சாப்பிட்டால், மூல வியாதியிலிருந்து குணம் கிடைக்குமாம்.

பொன்னாங்கண்ணி கீரையை உப்பில்லாமல் வேகவைத்து, வெண்ணெய் சேர்த்து ஒரு மண்டலம் உண்டு வர கண் சார்ந்த நோய்களில் இருந்து விடுதலை கிடைக்குமாம். கண் ஒளி பெறுமாம். இதை ஏற்கனவே நமது முன்னோர்கள் அனுபவத்தில் கண்டிருக்கிறார்கள். அதனால்தான் இதற்கு பொன்+ஆம்+காண்+இ=பொன்னாங்காணி என்று பொருத்தமான காரணப்பெயர் வைத்திருக்கிறார்கள். அதாவது இது நமது கண் ஒளியை பொன் போல ஒளிர செய்யுமாம். காலப்போக்கில் பொன்னாங்காணி என்பது மருவி பொன்னாங்கண்ணி ஆகி விட்டது.

பொன்னாங்கண்ணி கீரையை... மன்னிக்கவும். பொன்னாங்காணி கீரையை வதக்கி உண்டது மட்டுமல்லாமல் பசு நெய் விட்டு வதக்கி கண்களுக்கு வைத்து கட்டவும் செய்யலாமாம். தைலமாக செய்து தலைக்கு தேய்க்கவும் செய்யலாமாம்.

பொன்னாங்காணி கீரையை பச்சையாக ஒரு பிடி எடுத்து மென்று அதன் சாற்றை குடித்து வர சூட்டினால் வரும் வாய்புண், வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகளில் இருந்து குணம் கிடைக்கும். இது உடல் சூட்டை குறைக்கும்.

இப்போது எங்கு பார்த்தாலும் சிசேரியன். மற்றொரு பக்கம் காளான்கள் போல புதிது புதிதாக முளைக்கும் கருத்தரிப்பு மையங்கள். என்ன...
16/09/2022

இப்போது எங்கு பார்த்தாலும் சிசேரியன். மற்றொரு பக்கம் காளான்கள் போல புதிது புதிதாக முளைக்கும் கருத்தரிப்பு மையங்கள். என்னதான் ஆகிவிட்டது மனிதனுக்கு. ஒரு குழந்தை பெற்றெடுக்க இத்தனை கஷ்டப்பட வேண்டி இருக்கிறதே. மலட்டு ஆடுகளையோ, அல்லது மாடுகளையோ பற்றி எங்காவது நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இல்லை எதாவது கதையில் படித்திருக்கிறீர்களா? மனிதனுக்கு மட்டும் ஏன் இந்த நிலை. காரணம் யார்?

கார்ப்பரேட் கம்பெனிகள் என்றோ? அல்லது இலுமினாட்டிகளின் சதி என்றோ கூறி விடாதீர்கள். இதற்கெல்லாம் காரணம் நாம்தான்.

இன்றைக்கு நமக்கு கிடைக்கும் தண்ணீர், காய்கறிகள், அரிசி போன்ற பெரும்பாலான உணவு பொருட்கள் விளைந்தவை அல்ல. விளைய வைக்கப்பட்டவை. ஆம். உரம், மரபணு மாற்ற விதைகள் போன்ற காரணிகளால் விளைய வைக்கப்பட்டவை. இல்லையெனில் அனைவருக்கும் சோறு போடுவது எப்படி?

மரபணு மாற்ற பயிர்களால் நாம் கொஞ்சம் கொஞ்சமாக சாகவேண்டும். இல்லையெனில் உணவு பற்றாக்குறையால், ஒரேயடியாக சாகவேண்டும்.

பொருட்கள் குறைவாகவும், அதை வாங்குகிறவர்கள் அதிகமாகவும் இருந்தால் போட்டி உருவாகுமல்லவா? அப்படி உருவான போட்டியால் இங்கே விலைவாசி தாறுமாறாக உயர்கிறது. தக்காளி விலை 150 க்கு போன போதும் வாங்கிக்கொண்டே தானே இருந்தோம் நாம். வேறு வழி?

பணம் இருக்கிறது. போட்டி போட தெம்பிருக்கிறது. எப்படியாவது மற்றவரை முந்திவிட வேண்டும். வாழ்க்கை பாதையில் விரைவாக சென்றுவிட வேண்டும் என்று நினைத்து ஐந்து நாட்களில் முடிகிற வேலையை இரண்டு நாட்களில் முடிக்க லஞ்சம் கொடுக்க ஆரம்பிக்கிறோம். பிறகு வாங்கியவன் எல்லோரிடமும் எதிர் பார்க்கிறான். கவர்மெண்ட் ஆபிசிலிருந்து கல்யாணம் வரை. பிறகு எவனாவது ஒருவன் உத்தமனாக அவ்விடம் வந்து சேர்ந்தால், அவன் மீது அனைவருக்கும் சந்தேகம் வருகிறது. ஒன்று அவன் சாக்கடையில் விழவேண்டும் அல்லது உயிரை விட வேண்டும் என்ற நிலை அவனுக்கு உருவாகிறது.

சிசேரியனில் ஆரம்பித்து லஞ்சத்தில் வந்து நிற்கிறாயே. அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? சம்பந்தம் இருக்கிறது.

மரபணு மாற்ற பயிர்கள், மனிதாபி மானமற்ற தன்மை, விலைவாசி உயர்வு, தண்ணீர் மாசு, காற்று மாசு, பணத்தின் மீதான பேராசை போன்ற பலவிஷயங்களுக்கு காரணம் மக்கள் தொகைதான். நமது நாடு மக்கள் தொகையில் பிதுங்கி வழிகிறது. இந்தியத் தாய் கூட்ட நெரிசலில் நசுங்கி செத்து கொண்டிருக்கிறாள்.

ஒரு பயிர் விளைந்து விட்டால், அதன் விலை வெகுவாக குறைந்து விடும். ஏனெனில் தேவைக்கு அதிகம் கிடைப்பதால். அது போல இன்றைய இந்தியாவில் மனித பயிர் அதிகமாக விளைந்து கிடைக்கிறது. அதனால் மனிதனுக்கு மதிப்பில்லை. மனித உயிருக்கு மரியாதை இல்லை. அப்படி செய்தது நாம். இல்லையெனில் கடவுள்.

போராட்ட காலத்தில் பணம், அதிகாரம், புத்திசாலித்தனம் என்று ஏதோ ஒரு வகையில் சக்தி படைத்தவன் மட்டுமே வாழுகிறான். மற்றவன் வீழுகிறான். இங்கே நியாயம், தர்மம், நீதி என்ற எதுவும் இல்லை. ஒரு சாதாரண மனிதன் சாவதை பற்றி 140 கோடி பேர் வாழும் இடத்தில் என்ன கவலை இருக்க முடியும். பத்து பேர் மட்டுமே இருக்கும் இடத்தில் ஒருவர் இறந்தால் மட்டுமே கவலை இருக்கும். மக்கள் தொகை மிக குறைவாக உள்ள நாடுகளில் மனித உயிருக்கு நன்றாகவே மரியாதை இருக்கிறது.

எமதர்மனின் மொழியில் சொன்னால் பூலோகத்தில் மனிதப் பூச்சிகள் அதிகமாக பெருகி விட்டது. அதனால் அவற்றின் பெருக்கத்தை சிசேரியன், மலட்டுத்தன்மை போன்ற பலவழிகளில் சரி செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு மனிதாபி மானம், குரங்காபி மானம், ஆடாபி மானம், மாடாபி மானம் போன்ற எதுவும் கிடையாது. எது பெருகி விட்டதோ அதை குறைப்பார். எது குறைந்து விட்டதோ அதை பெருக்குவார். அவ்வளவுதான்.

நாமிருவர், நமக்கிருவர். முடிந்தால் ஒருவரோடு முடித்து கொள்ளுங்கள்.

வேம்பை பற்றி அறியாத ஒரு தமிழன் எந்த நாட்டிலும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு வேப்பிலை நம்முடைய வாழ்வியலோடு ஒன்றிவிட்ட ஒ...
06/09/2022

வேம்பை பற்றி அறியாத ஒரு தமிழன் எந்த நாட்டிலும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு வேப்பிலை நம்முடைய வாழ்வியலோடு ஒன்றிவிட்ட ஒன்று. ஒவ்வொரு தமிழனும் முதலிலே அறிந்த மூலிகை வேம்பாகவே இருக்கும். முதலில் குடித்த நாட்டு மருந்து வேப்பிலை சாறாகவே இருக்கும்.

குடல் புழுக்களை கொல்லவும், கிருமி நாசினியாகவும், தோல் வியாதிகளை விரட்டவும், அம்மைக்கு மருந்தாகவும், இன்னும் பலவழிகளிலும் நாம் வேப்பிலையை பயன்படுத்துகிறோம். விதைகளில் இருந்து எண்ணெய் எடுத்து பயன்படுத்துகிறோம். பிண்ணாக்கை கூட பயன்படுத்துகிறோம். இருப்பினும் வேப்பம்பூவை நாம் அரிதாகவே பயன்படுத்துகிறோம். ஏனெனில் அதை சேகரிப்பதும், சுத்தம் செய்வதும் கொஞ்சம் கடினமான வேலை.

வேப்பம் பூவை நெய்யில் வறுத்து, உப்பு, சுட்ட புளி, வறுத்த மிளகாய் வற்றல், கறிவேப்பிலை சேர்த்து துவையலாக அரைத்து சோற்றுடன் கலந்து உண்ணலாம். இதனால் பித்தம் தணியும், நீண்ட நாள் வாதம் ஒழியும், வாந்தி, ஏப்பம், மலக்கிருமிகள் முதலியவை போகும்.

வேப்பம் பூவை ஊறல் கஷாயம் செய்து குடிக்கலாம். உடல் பலவீனத்தை போக்கும்.

துவரம் பருப்பை வேகவைத்த நீர் கொண்டு ரசம் வைத்து, அதிலே நெய்யில் வறுத்த பூவை நொறுக்கி கலந்து பயன்படுத்தலாம். வாதம் சம்பந்தமான வியாதிகள் விலகும்.

அரைத்த மிளகை கரைத்த புளியில் சேர்த்து, உப்பு கூட்டி காய்ச்சி, நெய்யில் வதக்கிய வெங்காயத்தை அதனுடன் சேர்த்து, நெய்யில் வறுத்த வேப்பம் பூவை அதில் சேர்த்து கலக்கினால் குழம்பு போல வரும். இதை சோற்றுடன் கலந்து உண்ணலாம். வாதம் சார்ந்த பிரச்சனைகள் சரியாகும். இப்படியாக வேப்பம் பூவை மருந்தாக உண்ணாமல் துவையலாக, ரசமாக, குழம்பாக செய்து சாப்பிடலாம்.

காற்று நன்றாக வீசும் நேரத்தில் வேப்ப மரத்தின் அடியில் ஒரு பெரிய தார்பாயை விரித்து அதில் விழும் பூவை சேகரிக்கலாம். ஒருவேளை நாட்டு மருந்து கடைகளில் இருந்து பூ வாங்கி இருந்தால் நன்றாக சுத்தம் செய்யவேண்டும். அதில் மண், கல், தூசு போன்றவை இருக்கலாம்.

கடையில் வாங்கிய வேப்பம் பூவை சுத்தம் செய்ய ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி பூவை அதில் கொட்டினால், பூ மற்றும் குச்சிகள் மட்டும் மிதக்கும். அதை அப்படியே சல்லடை கொண்டு அள்ளி எடுத்து கொள்ளவேண்டும். இது போல மூன்று முறை செய்தால் மண், கல் நீக்கிய பூ கிடைக்கும். அதை நன்றாக காய வைத்து. பின் தூசு, மற்றும் குச்சிகளை நீக்கி சமைக்க பயன்படுத்தலாம்.

நில ஆவாரை அல்லது நில வாகை என்ற பெயர்களில் அழைக்கப்படும் இந்த தாவரம் சமவெளி, மலைப்பகுதி, வறண்டபகுதி என்ற பாகுபாடின்றி இந்...
26/08/2022

நில ஆவாரை அல்லது நில வாகை என்ற பெயர்களில் அழைக்கப்படும் இந்த தாவரம் சமவெளி, மலைப்பகுதி, வறண்டபகுதி என்ற பாகுபாடின்றி இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் வளர்கிறது. இதில் சீமை நிலாவரை, சூரத்து நிலாவரை என்று இரண்டு வகைகள் இருக்கிறது. அதாவது வட இந்திய மண்ணில் வளரும் நில ஆவாரைக்கும், தென்னிந்திய மண்ணில் வளரும் நிலாவாரைக்கும் கொஞ்சம் வித்தியாசம். தாவரவியல் பெயர் கூட வேறு வேறுதான்.

இதிலும் திருநெல்வேலி பகுதியில் வளர்கின்ற நில ஆவாரை மிகவும் சிறப்பானதாக இருக்கிறதாம். காரணம் அந்த மண்ணின் மகிமை.

பொன்னாவாரை என்று சொல்லப்படும் சாதாரண ஆவாரையில் இலை, பூ, காய், பட்டை, வேர் என்று அனைத்து பகுதிகளையும் நாம் பயன்படுத்தலாம். பூவை மட்டும் கஷாயமாக்கி குடிப்பதைவிட இலை, காய் எல்லாம் சேரும்போது நல்ல பலன் கிடைக்கும். ஆனால் நிலாவாரையில் இலை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

நிலாவரை இலைகளை பசும்பாலில் பிட்டவியல் செய்து வேகவைத்து, நிழலில் உலர்த்தி, அரைத்து, சலித்து சூரணமாக எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும். இதுவே அதற்கான சுத்திமுறை. சுத்தி செய்யப்படாத சூரணம் வாந்தி, வயிற்றுவலி, அல்லது குமட்டலை உருவாக்கும்.

குழந்தைகள், பெண்கள், வயதானவர் என பாகுபாடின்றி அனைவருக்கும் பேதியை கட்டுப்படுத்த நிலாவரை சூரணத்தை குடிக்கலாம். பால், சர்க்கரை சேர்த்தும் குடிக்கலாம். நிலாவரை கஷாயத்துடன் காடி சேர்த்து தோலுக்கு பூசினால் படை, சொறி, சிரங்கு போன்ற தோல் பிரச்சனைகள் சரியாகும். இந்த சூரணத்துடன் தேன் கலந்து சாப்பிட கீல்வாதம், மூட்டுவலி போன்றவை சரியாகும்.

இவை அனைத்திற்கும் மேலாக நிலாவரை இலையுடன், மருதாணி இலைகளை அரைத்து இளநரைக்கு பூசலாம். மயிர் கறுக்கும். முடி உதிர்வதும் குறையும்.

இது நத்தைசூரி என்ற ஒரு பூண்டு வகையை சார்ந்த மூலிகை. மிக அரிதான மூலிகை அல்ல. புற்களோடு புற்களாக, களைகளோடு களைகளாக வளர்ந்த...
16/08/2022

இது நத்தைசூரி என்ற ஒரு பூண்டு வகையை சார்ந்த மூலிகை. மிக அரிதான மூலிகை அல்ல. புற்களோடு புற்களாக, களைகளோடு களைகளாக வளர்ந்திருக்கும் ஒரு தாவரம். சீதபேதிக்கு நல்ல மருந்தாக பயன்படக்கூடியது.

இதன் சிறப்பம்சம் என்னவென்றால், மற்ற மூலிகைகளுக்கு இருக்கின்ற இயல்பான சாபம் இந்த மூலிகைக்கு கிடையாது. காயகல்பம் போன்ற மருந்துகள் செய்வதற்கு ஏற்ற மூலிகை இது.

சாபம் என்பது என்ன?

பொதுவாக ஒரு மூலிகையை பறிக்கும்போது அதிலிருக்கும் உயிர்சக்தி (கிட்டத்தட்ட நமது சூக்கும சரீரம் போன்றது) வெகுவாக குறைந்துவிடும். பிறகு அதை கசக்கி, இடித்து சாறு பிழிந்து சாப்பிடும்போது இன்னும் கொஞ்சம் குறையும். அரவை இயந்திரத்தில் போட்டு அரைத்தால் அதிகபட்ச உயிர்சக்தி போய்விடும். நமக்கு கடைசியில் மருந்தாக கிடைப்பது, உயிர்சக்தி அற்ற, வேதிப்பொருட்கள் மட்டும் உள்ள வெறும் சக்கைதான். தயாரிக்கப்படும் மருந்தில் கொஞ்சம் உயிர்சக்தி இருந்தால், அது நமக்கு விரைவான குணம் தரும். ஆனால் சக்கையை கொண்டு தயாரித்தால் என்ன கிடைக்கும்?

அதாவது தாவரத்தில் உள்ள உயிர்சக்தி, நம் உயிர்சக்தியோடு கலக்கவேண்டும். அதுவே நல்ல பலன் தரும். இதனால்தான் ராட்சத இயந்திரங்களை விட சாதாரண கல்வத்தில், அம்மியில் அரைக்கப்படும் மருந்தில் வீரியம் இருக்கும் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். (அதுபோல கைக்குத்தல் அரிசியில் உயிர்சக்தி இருந்ததோ என்னவோ?)

மூலிகைகள் இப்படி கடுமையான முறையில் அரைக்கப்படும்பொழுது அவற்றின் உயிர்சக்தி வீணாகிறது அல்லவா. இதுவே மூலிகையின் சாபம். அந்த மாதிரியான சாபம் நத்தைசூரி போன்ற ஒரு சில எண்ணிசொல்லக்கூடிய மூலிகைகளுக்கு மட்டும் கிடையாது. இந்தமாதிரி சாபமில்லாத மூலிகைகளை நாம் எடுத்துக்கொள்ளும் போது வியாதி குணமாவதோடு நமது சூக்கும சரீரமும் பலப்படும்.

அந்த வகையில், நத்தைசூரி விதைகளை லேகியமாக செய்து சீதபேதிக்கு கொடுக்கலாம். நத்தைசூரியின் வேரை நன்னாரி வேரை போல பயன்படுத்தலாம். குணம் ஒன்றுதான். நத்தைசூரி வேர் உடலை தேற்றும்.

நத்தைசூரி விதைகளை சூரணமாக்கி காபித்தூளை போலவும் பயன்படுத்தலாமாம். இதைப்பற்றி கேள்விப்பட்டபோது மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. இன்னும் முயற்சி செய்து பார்க்கவில்லை. விரைவில் செய்து பார்க்கவேண்டும்.

மேலும் நத்தைசூரி விதைகளை ஒருநாள் முழுக்க செம்மண் கலந்த தண்ணீரில் ஊறவைத்து, பின் நன்றாக கழுவி, காயவைத்து அதன் பிறகே பயன்படுத்த வேண்டும். இது அதற்கான சுத்திமுறை.

காட்டுக்கடுகு, நாய்க்கடுகு, எள் கடுகு என்று பல பெயர்களிலும் அழைக்கப்படும் இந்த மூலிகையை நாம் அனைவருமே பார்த்திருப்போம். ...
09/08/2022

காட்டுக்கடுகு, நாய்க்கடுகு, எள் கடுகு என்று பல பெயர்களிலும் அழைக்கப்படும் இந்த மூலிகையை நாம் அனைவருமே பார்த்திருப்போம். சாலை ஓரங்களில், குப்பைகளில், வயல்வெளிகளில், பயிரிடப்படாத இடங்களில் என எல்லா இடங்களிலும் பஞ்சமே இல்லாமல் வளர்ந்திருக்கும். ஒரு வயல்வெளிக்குள் பரவி வளர ஆரம்பித்து விட்டால், அங்கே களையெடுப்பவர்களுக்கு பெரிய தலைவலியை உருவாக்கும்.

இதன் விதைகள் கடுகைபோல, ஆனால் அதைவிட மிக சிறியதாக இருக்கும். விதைகளை தண்ணீரில் ஊற வைத்தால், சப்ஜா விதைகளை போல ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு, நீரை குடித்து உடனே பருத்துவிடும். இது கடையில் வாங்கிய விதையில் இருக்கும் மண்ணை நீக்க அப்படி கழுவியபோது எனக்கு நடந்த அனுபவம்.

இதன் விதை மட்டும் இப்பொழுது பலரால் பயன்படுத்தப்படுகிறது. இந்த விதையை பொடியாக்கி தண்ணீரில் ஊற வைத்து, அந்த நீரை கொண்டு புண்களை கழுவ, புழுக்கள் இருந்தால் வெளிப்பட்டு, சுத்தமாகும். விதையை காடிநீர் விட்டு அரைத்து வீக்கங்களுக்கு போட வீக்கம் குறையும்.

விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் சொறி, சிரங்கு போன்ற தோல்வியாதிகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. மேலும் விதையை நொறுக்கி, சம்பிராணியுடன் சேர்த்து பயன்படுத்தலாம். கெட்ட சக்திகளை விரட்டும். வேள்விகளில் கூட இது பயன்படுத்தப்படுகிறது.

இதுமட்டுமல்ல. இந்த விதைகளை சாதாரண கடுகுக்கு மாற்றாக பயன்படுத்தலாம். விதையை துவையல் செய்தும் சாப்பிடலாம். இதனால் வாயு சம்பந்தப்பட்ட வியாதிகள் விலகும். இதன் இலையையும் துவையல் செய்து சாப்பிடலாம்.

நாய்கடுகு வேரை, அரை பலம் (18 மிலி) ஆமணக்கு எண்ணெய் சேர்த்து காய்ச்சி, வடிகட்டி குழந்தைகளுக்கு கொடுக்க மாந்தம் சரியாகும். வயிற்று கிருமிகள் வெளியேறும்.

வேம்பாளம் பட்டை என்றொரு பாரம்பரிய மருத்துவ சரக்கு இப்பொழுது தமிழகத்தின் பெண்கள் மத்தியில் பிரபலம். ஆங்கிலத்தில் Alkanet ...
04/08/2022

வேம்பாளம் பட்டை என்றொரு பாரம்பரிய மருத்துவ சரக்கு இப்பொழுது தமிழகத்தின் பெண்கள் மத்தியில் பிரபலம். ஆங்கிலத்தில் Alkanet Roots என்றும், இந்தியில் Ratanjot Roots என்றும் வேம்பாளம்பட்டையை குறிப்பிடுகிறார்கள்.

அது முடி அடர்த்தியாக வளர உதவுகிறது, தலைமுடியின் வேர்க்கால்களுக்கு ஊட்டச்சத்து அளிக்கிறது, காயங்களை குணப்படுத்த உதவுகிறது, வயதாவதை தடுக்கிறது என்று அதைக்குறித்து பலவாறாக இணையத்தில் எழுதி தள்ளியிருக்கிறார்கள். எல்லோரும் அதை எங்கிருந்து படித்தார்கள் என்று தெரியவில்லை.

உண்மையில் வேம்பாளம் பட்டை நம் நாட்டு பாரம்பரிய பொருள் இல்லை. ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவது. அந்த பட்டையில் இருக்கும் ஒரு விதமான நிறமிகள் (Alkanin) தண்ணீரில் கரையாதவை. ஆனால் ஆல்கஹால் மற்றும் ஈதரில் கரையக்கூடியவை.

எண்ணெய் கரைசலில் இதன் pH அளவு பொதுவாக 6.1 முதல் 9 வரை இருக்கிறது. அதாவது 6-7 என்ற அளவில் இருக்கும்போது வலிமை குறைந்த அமில தன்மையிலும், 7-9 என்ற அளவில் இருக்கும் போது வலிமை குறைந்த காரத்தன்மையிலும் இருக்கிறது. கிட்டத்தட்ட தண்ணீரை போலவே தான்.

பொதுவாக எண்ணெய்களில் ஈதர் மற்றும் ஆல்கஹால் பண்புகள் இருப்பதால் இந்த நிறமிகள் தேங்காய் எண்ணெய் போன்றவற்றில் கரைகின்றன. அடர்த்தியான சிவப்பு கலந்த கருமை நிறத்தை இவை உருவாக்குவதால் தலைக்கு தேய்ப்பதற்கு (முடியை கருமையாக எடுத்துக்காட்ட) இதை பயன்படுத்தலாம்.

மேலும் இந்த நிறமியை உணவுப்பொருட்களுக்கு நிறமூட்டவும், மரச்சாமான்களுக்கு வெளிப்பூச்சாக அடிக்கவும், உதட்டு சாயத்திலும் பயன்படுத்துகிறார்கள். ஏனெனில் அது நிறமி அல்லவா?.

ஆனால் தலைமுடி வேர்களுக்கு எந்த ஊட்டச்சத்தும் இது அளிப்பதாகவோ, வயதாவதை தடுப்பதாகவோ, காயங்களை குணப்படுத்துவதாகவோ நம்பகமான குறிப்புகள் பழமையான புத்தகங்களில் இல்லை.

வழக்கமாக ஒரு பொருளை பற்றி கட்டுரை எழுதும்போது அது சார்ந்த தகவல்கள் என்னிடம் நிறைய இருக்கும், கேள்விகள் குறைவாக இருக்கும். ஆனால் வேம்பாளம்பட்டை விஷயத்தில் கேள்விகளே அதிகம் உள்ளன. அனுபவம் வாய்ந்தவர்கள், அதை பயன்படுத்தி பார்த்தவர்கள் கொஞ்சம் விளக்கவும். நான் எழுதியதில் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.

கரிசலாங்கண்ணி அல்லது பிருங்கராஜ் என்ற பெயரை கேட்ட உடன் நமக்கு நீளமான கருகருவென வளர்ந்த கூந்தல் மட்டுமே நினைவுக்கு வரும்....
27/07/2022

கரிசலாங்கண்ணி அல்லது பிருங்கராஜ் என்ற பெயரை கேட்ட உடன் நமக்கு நீளமான கருகருவென வளர்ந்த கூந்தல் மட்டுமே நினைவுக்கு வரும். ஏனெனில் நாம் கரிசலாங்கண்ணியை தலைமுடியை அதிகமாக, நெருக்கமாக வளரவைக்க மட்டுமே பயன்படுத்துகிறோம். அப்படித்தான் தொலைகாட்சி விளம்பரங்களும் நமக்கு கற்றுத்தந்திருக்கின்றன. ஆனால் கரிசாலையில் இன்னும் நிறைய பலன்கள் உள்ளன.

கரிசாலையில் வெள்ளை, மஞ்சள், சிகப்பு, நீலம் என்று நான்கு வகைகள் உள்ளன. இதில் வெள்ளை மட்டுமே எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூடியது. இப்போது மஞ்சளும் ஓரளவிற்கு கிடைக்கிறது. மற்ற வகைகள் அரிதானவை.

கரிசலாங்கண்ணி சாறு ஒரு பங்கு, விளக்கெண்ணெய் ஒரு பங்கு, கொஞ்சம் பூண்டு சேர்த்து கொதிக்கவைத்து ஒரு நேரத்திற்கு 5 மி.லி அளவு கொடுக்க காய்ச்சல் கட்டிகள், குஷ்டம், பாண்டு போன்ற தோல்வியாதிகளை நீக்கும். இது காமாலையை கூட குணப்படுத்தும்.

கரிசலாங்கண்ணி சாறு சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி இருவேளை கொடுக்க காச நோய் சரியாகும். கரிசலாங்கண்ணி சாறு அப்படியே மோர் சேர்த்து சாப்பிட பாம்புக்கடி விஷம் இறங்கும். அவசர நேரத்தில் முதலுதவிக்காக கூட செய்யலாம்.

சிறு குழந்தைகள் அடிக்கடி காதுவலியால் அவதிப்படும். எனக்கு தெரிந்தவரை அதற்கு வைத்தியமாக மருள் கற்றாழை தண்டை எடுத்து குத்துவிளக்கில் காட்டி அதன் சாற்றை காதில் பிழிந்து விடுவார்கள். விரைவில் காதுவலி சரியாகும். அந்தக் கற்றாழை கொஞ்சம் அரிது.

ஆனால் அந்த மருள் கற்றாழைக்கு பதிலாக கரிசலாங்கண்ணி சாறு கூட பயன்படுத்தலாம். இவற்றில் முடிவளர்ச்சிக்கு தலைக்கு தேய்ப்பது மட்டும் தான் வெளி உபயோகம்.

கல்யாண முருங்கை வேலிக்காகவும் மற்ற கொடிவகைகள் படர்ந்து வளர்வதற்காகவும் வளர்க்கப்படுகின்ற மரம். மரத்தின் அனைத்து தண்டு பக...
26/07/2022

கல்யாண முருங்கை வேலிக்காகவும் மற்ற கொடிவகைகள் படர்ந்து வளர்வதற்காகவும் வளர்க்கப்படுகின்ற மரம். மரத்தின் அனைத்து தண்டு பகுதியிலும் முட்கள் இருக்கும். இலை கிட்டத்தட்ட அரச இலை போல இருக்கும். இதற்கு முள்முருங்கை என்றொரு காரணப்பெயரும், அரசமரத்தின் சக்களத்தி என்றொரு பொருத்தமான பெயரும் உண்டு.

இதன் இலை சாறு வாந்தி, வயிற்றுவலி, பித்தக்காய்ச்சல், சூட்டினால் வரும் வாய்ப்புண் போன்றவற்றை நீக்கும். பெண்களுக்கு வரும் கருப்பை தொடர்பான கோளாறுகளை சரிசெய்யும். இதன் பூ கருப்பையில் உருவாகும் ரத்தக்கட்டிகளை சரி செய்யும்.

"கருப்பா சயத்திற் கறுத்துத் தடித்தே
பருத்தவுதிரத் திரளை பஞ்சாய் துரத்திவிடும்
பண்முருக்கு மின்மொழிப் பாவாய் உலகறிய
முன்முருக்கம் பூவை மொழி "

என்று முள்முருங்கை பூவை பற்றி சொல்கிறது அகத்திய குணபாட பாடல்.

இதன் இலைச்சாறு தேனுடன் சேர்த்து சாப்பிட குடல் புழுக்களை, கிருமிகளை வெளியேற்றும். இலையை தேங்காய் எண்ணெயில் புசித்து சாப்பிட நன்றாக பால் சுரக்கும்.

இலைச்சாறை தொடர்ந்து சாப்பிட்டு வர, மாதவிடாய் சார்ந்த வயிற்றுவலியை போக்கும். மலட்டு தன்மையை நீக்கும். பெண்மலட்டுத்தன்மை, கருப்பைக்கட்டிகள் போன்ற பிரச்சனைகளுக்கு பொதுவாக அரச இலையை சாறு எடுத்து குடிக்க சரியாகும். கருப்பை சார்ந்த பிரச்சனைகளை தீர்ப்பதில் அந்த அரசமரத்துக்கு போட்டியாக கல்யாண முருங்கை இருப்பதால் இதனை "அரசமரத்தின் சக்களத்தி" என்று நம் முன்னோர்கள் கூறி இருக்கிறார்கள்.

நம் அனைவருக்கும் கடுக்காயைத் தெரியும். அதன் பொதுவான குணம் பற்றியும், அதை உண்பதால் கிடைக்கும் நற்பலன்கள் பற்றியும் தெரியு...
14/07/2022

நம் அனைவருக்கும் கடுக்காயைத் தெரியும். அதன் பொதுவான குணம் பற்றியும், அதை உண்பதால் கிடைக்கும் நற்பலன்கள் பற்றியும் தெரியும். ஆனால் நுணுக்கமாக பார்த்தால், கடுக்காயில் அதன் நிறம், உருவ அமைப்பு, விளையும் மண் போன்றவற்றுக்கு ஏற்ப பல வகைகள் இருக்கின்றன. அந்த வகைகளில் சில சில பலன் சார்ந்த வேறுபாடுகளும் இருக்கின்றன.

வேறுபாடுகள் சில.

1. விசயன் கடுக்காய் - இது அவந்தியில் விளைகிறது. பேய்ச்சுரைக்காய் போல உருவம் இருக்கும். வாதத்தை போக்குவதில் சிறந்தது.
2. அரோகிணி கடுக்காய் - கன்னியாகுமரியில் விளையும் இக்கடுக்காய் வட்டமாக நன்கு தெளிவான வரிகளை கொண்டது. காய் சிறியது ஆனால் உள்ளே உள்ள கொட்டை பெரியது. கபதோஷத்தை போக்குவதில் சிறந்தது.
3. பிருத்வி கடுக்காய் - சௌராஷ்ட்ராவில் விளையும் இக்கடுக்காய் மெல்லிய தோலை கொண்டது. பித்த தோஷத்தை போக்குவதிலும், ஆயுளை வளர்ப்பதிலும் சிறந்தது.
4. அமிர்த கடுக்காய் - காசியில் உற்பத்தியாகும் இக்கடுக்காய் இப்பொழுது கிடைப்பது அரிது. சதைப்பற்று அதிகம் உள்ள இது கபத்தை போக்க கூடியது. இது ஆறு அங்குல நீளமுள்ளது.
5. சீவந்தி கடுக்காய் - காடுகளில் விளையக்கூடியது. பொன்னிறமாக இருக்கும். வாயுவால் உண்டான மூலத்தை போக்குவதில் சிறந்தது.
6. மொந்தன் கடுக்காய் - இது மலைகளில் மட்டுமே விளைகிறது. மூன்று வரிகளையும், ஐந்து வண்ணங்களையும் கொண்டது.
7. அபயன் கடுக்காய் - பொதிகை மலையில் மட்டும் உற்பத்தி ஆகும் இக்கடுக்காய் ஐந்து வரிகளையும், கறுப்பு நிறமாகவும் இருக்கும். ஒன்றரை அல்லது இரண்டு அங்குல நீளம் கொண்ட இது கோழையகற்றுவதிலும், மலத்தை நன்றாக கழிக்க செய்து குடலை சுத்தம் செய்வதிலும் சிறந்தது.

இந்த வகைகளில் நன்கு கருமை நிறமாக இருப்பதை கருங்கடுக்காய் என்றும், சற்று சிவப்பு நிறம் கலந்ததை செங்கடுக்காய் என்றும், வரிகள் அதிகம் வரின் வரிக்கடுக்காய் என்றும், சற்று பிஞ்சாக இருப்பதை பால்கடுக்காய் என்றும் வகைப்படுத்தி உள்ளனர் நமது முன்னோர்கள்.

கருங்கடுக்காய் வயிற்றை சுத்தம் செய்வது, உடலை அழகூட்டுவது, புத்தியை தெளிய வைப்பது, முத்தோடத்தை போக்குவது போன்றதில் சிறந்தது. செங்கடுக்காய் முத்தோடத்தை போக்குவது, நாடி நரம்புகளில் உள்ள சளியை நீக்குவது போன்றவற்றில் சிறந்தது. வரிக்கடுக்காய் உடலை வளர்ப்பதிலும், விந்து விருத்தியிலும், முத்தோடம் போக்குவதிலும் சிறந்தது.

கடுக்காயை உப்புடன் சேர்த்துண்ண கபமும், சர்க்கரையுடன் சேர்த்துண்ண பித்தமும், நெய்யுடன் சேர்த்துண்ண வாதமும், வெல்லத்துடன் சேர்த்துண்ண மூன்று தோஷங்களும் சமனப்படும். நமது உடல் எந்த நாடி அதிகம் கொண்டதோ அதற்கேற்ப கடுக்காயை உண்பது சிறந்தது. வெல்லத்துடன் சேர்த்துண்டால் எல்லாம் சரியாகி விடும் என்று நினைப்பதும் தவறு.

எந்த வகையாக இருந்தாலும் முத்தோடம் போக்குவதில் பொதுவாக செயல்படுகின்றன. மற்ற பயன்பாடுகள் மட்டுமே வித்தியாசம். நான் அறிந்தவரையில் விசயன் கடுக்காய், அரோகிணி கடுக்காய், அபயன் கடுக்காய் போன்றவை அதிகம் பயன்பாட்டில் உள்ளன. அறுசுவையில் உப்புச்சுவை தவிர மற்ற அனைத்தும் கடுக்காயில் உண்டு. கடுக்காயை பற்றி எழுதவேண்டுமாயின் பக்கம் பக்கமாக எழுதலாம்.

"கடுக்காயுந் தாயுந் கருதிலொன்றென் றாலும்
கடுக்காயத் தாய்க்கதிகங் காண் நீ"

தாய் அறுசுவை உணவை ஊட்டி உடலை வளர்ப்பாள். கடுக்காய் உடற்பிணிகளை விரட்டி உடலை வளர்க்கும். அதனால் கடுக்காயை தாயுடன் ஒப்பிட்டால் கூட கடுக்கையே சிறந்தது என்று கூறுகிறது அகத்தியர் குணபாட பாடல். இதைவிட வேறு என்ன உவமை வேண்டும் கடுக்காயை பற்றி சொல்ல.

இது குமட்டிக்காய். தும்மட்டிக்காய், ஆற்றுத்தும்மட்டி, பேய்த்தும்மட்டி, பிச்சிக்காய் என்று பல பெயர்கள் இதற்கு உண்டு. ஆனால...
22/06/2022

இது குமட்டிக்காய். தும்மட்டிக்காய், ஆற்றுத்தும்மட்டி, பேய்த்தும்மட்டி, பிச்சிக்காய் என்று பல பெயர்கள் இதற்கு உண்டு. ஆனால் எனக்கு பரிச்சயமான பெயர் குமட்டிக்காய். பார்ப்பதற்கு தர்பூசணி பழம் போலவும், ஒரு எலுமிச்சம் பழம் அல்லது நார்த்தங்காய் அளவிலும் இருக்கும். இது கொடி வகையை சேர்ந்தது. ஆற்றுப்படுகைகள், வறண்ட ஓடைகள் போன்ற இடங்களில் பெரும்பாலும் கோடைக்காலத்தில் கிடைக்கின்ற காய் இது.

இதன் சாறு அநேக தைல மருந்துகளில் கூட்டு பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இப்பழத்தின் சாற்றுபகுதியை நீர் சேர்த்து அரைத்து கட்டிகளின் மீது பற்று போடலாம். வீக்கம் குறையும்.

இப்பழத்தின் சதை பகுதியை சூரணமாக்கி கொடுக்க வயிற்று உப்புசம், மலக்கட்டு, வயிற்று கிருமிகள் அழியும். இதன் சதைப்பகுதி மிகவும் கசப்பாக இருக்கும். அதிக அளவில் சாப்பிடமுடியாது. அதிமதுர சூரணம் போல சாப்பிடவும் கூடாது. இல்லையெனில் வாந்தி, குமட்டல் உருவாகும். (அதனால்தான் குமட்டிக்காய் என்று பெயர் வைத்தார்களோ என்னவோ?)

மேலும் சூரணம் செய்யும்போது, தோல், விதைகள், விதையை ஒட்டிய சதை போன்றவற்றை நீக்கி, பழத்தின் சதைப்பகுதியை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

இத்தாவரத்தின் வேரை, திப்பிலி சேர்த்து அரைத்து குன்றிமணி அளவு சாப்பிட்டு வர வாதம் சார்ந்த மூட்டுவாதம் குணமாகும்.

என்னுடைய அனுபவத்தின் படி, தலையில் பொடுகு தவிர, புழுவெட்டு என்று ஒரு பிரச்சனையாலும் முடி உதிர வாய்ப்புள்ளது. இந்த புழுக்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மொத்தமாக கொஞ்சம் முடிகளை வெட்டிவிடும். பொட்டல் காடாக்கிவிடும். அந்த பிரச்சனைக்கு இந்தக் குமட்டிக்காய் சாறு மிகவும் சிறந்த மருந்து. காயை அப்படியே வாங்கி நசுக்கி சாறை தலையில் தேய்க்கலாம். தலைக்கு தேய்க்க பழத்தை அப்படியே பயன்படுத்தவேண்டும்.

கோடைகாலத்தில் மட்டுமே அதிகம் கிடைக்க கூடிய காய் இது. மேலும் கொடியில் இருந்து பறிக்கப்பட்டபின் இது சீக்கிரமாக அழுகி விடும். அதனால் காயை வெட்டி காயவைத்து, லேசாக நொறுக்கி தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து தலைக்கு தேய்க்கலாம். நல்ல தீர்வு கிடைக்கும்.

Address

No 2, Roja Nagar, Thiruparankundram
Madurai
625005

Alerts

Be the first to know and let us send you an email when Valli Organics posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Valli Organics:

Share