10/04/2026
அநீதியாக வெளியிடப்பட்ட வைத்தியர்களுக்கான Post Intern நிலைய ஒதுக்கீடு பட்டியல்:
வைத்தியர்களின் உள்ளக பயிற்சிக்குப் பிந்தைய (Post Intern) நிலைய ஒதுக்கீடு பட்டியல் சுகாதார அமைச்சினால் புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த பட்டியல் தயாரிப்பில் வைத்தியர்களின் இடமாற்ற சபையின் ஒப்புதல் பெறப்படவில்லை என்பது மிகக் கவலைக்குரிய விடயமாகும்.
இந்த பிரச்சினையை முன்னிறுத்தி அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) கடந்த வாரமும் தற்போதும்பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதும் அனைவருக்கும் தெரிந்ததே. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சுகாதார அமைச்சருடன் நேற்று கலந்துரையாடல் நடைபெறவிருந்த நிலையில், அதற்கு முன்பாகவே அவசரமாக இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த புதிய பட்டியலில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மிகப் பெரிய அநீதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 240,000 மக்களுக்கு சேவை வழங்கும் இந்த வைத்தியசாலை, பரந்த பிரதேசத்தைச் சேவையளிக்கும் முக்கிய சுகாதார மையமாகும்.
இங்கு Radiology பிரிவிற்கு அங்கீகரிக்கப்பட்ட வைத்தியர்களின் ஆளணி எண்ணிக்கை 3 ஆகும். தற்போது இந்த பிரிவில் ஒரே ஒரு நிரந்தர வைத்தியர் மட்டுமே உள்ளார்; அவர் கூட மகப்பேறு விடுமுறையில் உள்ளார். இந்நிலையிலேயே இந்த முக்கிய பிரிவுக்காக விண்ணப்பம் கோரப்பட்டும் , சுகாதார அமைச்சின் தன்னிச்சையான முடிவினால் அந்தப்பதவி நீக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சுகாதார அமைச்சும் GMOA-வும் இணைந்து தயாரித்த பட்டியலில் இந்தப் பதவி இடம்பெற்றிருந்தது. இந்த பதவிக்காக ஒரு வைத்தியர் தன்னை நியமிக்குமாறு தனது முதல் விருப்பாக விண்ணப்பித்திருந்த போதிலும், அந்த ஆளணி தற்போது நீக்கப்பட்டிருப்பது மிகுந்த அநீதியான செயலாகும்.
இங்கு மாத்திரமன்றி, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு விண்ணப்ப பட்டியலில் காணப்பட்ட கண் மருத்துவ பிரிவுக்கான மருத்துவர் கூட தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலின் படி அநிதியாக நீக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் இவ்வாறான தன்னிச்சையான தீர்மானங்களால் பாதிக்கப்படப்போவது நமது பிரதேச மக்களே.
இவ்வாறான தன்னிச்சையான செயற்பாடுகளால் நமது பிரதேசத்தின் முக்கிய மருத்துவ சேவைகள் பாதிக்கப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறும் அபாயம் உள்ளது.